குடிகார தந்தை, திட்டிக்கொண்டே இருக்கும் தாய் (நக்கலைட்ஸ் மீனா) ஆகியோரின் மகன் சரவணன் (கார்த்திக் விஜய்), மகள் துர்கா (பிரணதி சிவசங்கரன்). பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கையான அவர்கள், முள்ளில் சிக்கி உயிருக்குப் போராடும் ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். அதை உயிராக மதிக்கும் துர்கா, ‘புஜ்ஜி’ என்று பெயரிட்டு கொஞ்சி மகிழ்கிறார். நாளடைவில் நன்கு வளர்ந்த புஜ்ஜியை, துர்காவின் தந்தை திருட்டுத்தனமாக விற்றுவிடுகிறார். பிறகு புஜ்ஜியைத் தேடி துர்காவும், சரவணனும் அலைகின்றனர். அவர்களுக்கு உதவ, ஆதரவற்ற பெண் தர்ஷினி (லாவண்யா கண்மணி) வருகிறார்.
அப்போது ஒரு கசாப்புக்கடையில் புஜ்ஜியை வெட்டத் தயாராகும் உரிமையாளரை அவர்கள் தடுக்கின்றனர். 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் புஜ்ஜியை திருப்பிக் கொடுப்பேன் என்று கறாராகச் சொல்லும் உரிமையாளர், அவர்களை அங்கிருந்து விரட்டுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ஆட்டுக்குட்டி மீது தங்கை வைத்திருக்கும் பாசத்துக்காக, அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திவிடும் சரவணனாக கார்த்திக் விஜய் இயல்பாக நடித்துள்ளார். புஜ்ஜிக்காக பாசமலராக மாறிய துர்கா வேடத்தில் பிரணதி சிவசங்கரன் வாழ்ந்திருக்கிறார். சிறுமி என்றாலும், கேரக்டரை உள்வாங்கி நடித்து சிறப்பு சேர்த்துள்ளார்.
பல இடங்களில் மனதை உருக வைக்கிறார். புஜ்ஜியைத் தேடி பட்டணம், பீடம் பள்ளி, அய்யம்பாளையம், பல்லடம், கண்ணம்பாளையம், அனுப்பட்டி ஆகிய ஊர்களுக்குப் பயணிக்கும் அவர்களின் பாசப் போராட்டம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. ஆடு வெட்டப்படுவதை தடுக்க உதவும் தர்ஷினியாக வரும் லாவண்யா கண்மணி, பிறருக்கு உதவும் இளைஞன் சிவாவாக வரும் கமல்குமார், கசாப்புக்கடை பாய் வரதராஜன், தீயநோக்கம் கொண்ட இன்ஸ்பெக்டரை கம்பீரமாக எதிர்க்கும் கான்ஸ்டபிள் பிரபாவாக வரும் வைத்தீஸ்வரி, தாயாக வரும் நக்கலைட்ஸ் மீனா ஆகியோரும் மனதில் பதிகின்றனர்.
ராம் கந்தசாமி எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இயல்பான கதைக்கு கார்த்திக்ராஜாவின் பின்னணி இசையும், அருண்மொழிச்சோழனின் ஒளிப்பதிவும், சரவணன் மாதேஸ்வரனின் எடிட்டிங்கும் பலமாக இருக்கின்றன. ‘அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்’ என்ற கருத்துடன் உருவான குழந்தைகளுக்கான படமான இதில் மது அருந்தும் காட்சிகளும், போலீசை எதிர்மறையாகக் காட்டியிருப்பதும் நெருடுகிறது.