பெங்களூரு: ரஜினிகாந்த் நடிக்க வருவதற்கு முன்பு பெங்களூருவில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அவருடன் பணியாற்றிய சில கண்டக்டர்கள் இன்னும் அவருடன் நட்புடன் உள்ளனர். பெங்களூரு செல்லும்போது அடிக்கடி அவர்களை சந்தித்து பேசுவார். தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, அடுத்த படத்திற்கு தயாராகிவிட்ட ரஜினி, இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். இந்த பயணத்தில் அவர் பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார். பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பல ஆன்மிக குருமார்களை சந்தித்தார். இந்நிலையில் பெங்களூரு சென்ற ரஜினி திடீரென ஜெயநகரில் தான் பணியாற்றிய பஸ் டெப்போவுக்கு சென்றார். அங்கு சுற்றிப்பார்த்த ரஜினி, டெப்போவில் நடந்த மாற்றங்கள் குறித்து கேட்டறிந்தார். தற்போது பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் அங்குள்ளவர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் வரை அங்கிருந்துவிட்டு, பின்னர் கிளம்பிச் சென்றார். ரஜினி டெப்போவுக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினார்கள்.