சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சன், ராணா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க இணைந்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இப்படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. த.செ.ஞானவேல் எழுதி இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் ஹீரோயின்களாக இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. நேற்று படக்குழுவினர் வெளியிட்ட ஒரு பதிவில், முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் வர்த்தகம் தெலுங்கு சினிமாவையும் டார்கெட் செய்து நடக்க உள்ளதால், இதில் முன்னணி தெலுங்கு ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி நானியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து ராணாவிடமும் பேசப்பட்டது. தெலுங்கில் பிசியாக இருக்கும் ராணா, தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர், ரஜினிகாந்த் படம் என்பதால் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.