சென்னை: ஹாலிவுட்டைப் போல் இந்திய மொழிகளிலும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்கள் உருவாக்கப்படுகின்றன. கோலி வுட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதை தொடங்கி வைத்தார். இந்நிலையில், மறைந்த ராம.நாராயணன் இயக்கத்தில் 1990ல் வெளியான ’ஆடிவெள்ளி’ என்ற பக்திப் படம், அதே பெயரில் மீண்டும் உருவாக்கப்படுகிறது. உலகில் தீயசக்திகள் வீறுகொண்டு எழும்போது, தெய்வீக சக்தி விழித்துக்கொள்கிறது என்ற கருத்துடன் உருவாக்கப் படும் ’ஆடிவெள்ளி’ படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. ராம.நாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்.ராமசாமியின் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தை பி.வி.தரணீ தரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ’பர்மா’, ’ஜாக்சன் துரை’, ‘ராஜா ரங்குஸ்கி’, ’ரேஞ்சர்’, ’ஜாக்சன் துரை 2’ ஆகிய படங்களை இயக்கியுள் ளார். ‘ராம.நாராயணன் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்ற அறிவிப்புடன் வெளியான இப்படத்தில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுகிறது. ‘ஜங்கிள் புக்’ என்ற படத்துக்கு அகாடமி விருது வென்றிருக்கும் சிஜி நிறுவனத்துடன் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘ஆடிவெள்ளி’ படம், பிரமாண்டமான பான் இந்தியா படமாக உருவாக்கப்படுகிறது.