மும்பை: பத்திரிகையாளர் அபிஷேக் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், வைரலான நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், வேறொரு பெண்ணின் முகத்துடன் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மார்பிங் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண், இறுக்கமான உடையை அணிந்துகொண்டு லிஃப்டில் நுழைவதைக் காண முடிகிறது. இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வரும் நிலையில், அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்தும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பத்திரிகையாளர் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் போலியான புகைப்படங்கள், வீடியோக்கள் வேகமாக பரவுகின்றன.
அவ்வாறு வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். பத்திரிகையாளரின் பதிவை டேக் செய்த பிரபல நடிகர் அமிதாப் பச்சன், தனது சமூக வலைதள பக்கத்தில், ‘ஆமாம்… சட்டப்படி வழக்கு தொடர முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த வீடியோவுக்கு ராஷ்மிகா மந்தனா தரப்பில் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.