இந்தியில் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர், திரிப்தி டிம்ரி நடித்த ‘அனிமல்’ படம், 900 கோடி ரூபாய் வசூலித்தது. இப்படத்தில் வன்முறையும், ஆபாசமும் அதிகமாக இருப்பதாக கண்டனம் எழுந்தது. ரன்பீர் கபூரின் கேரக்டரை கடுமையாக திட்டினர். இந்நிலையில் படத்துக்கும், ரன்பீர் கபூருக்கும் ஆதரவாக ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள். ‘அனிமல்’ படத்தை ஒரு படமாக மட்டுமே பார்த்தேன். ஒரு ஹீரோ படத்தில் புகைப்பிடித்தால், அது ரசிகர்களை பாதிக்கிறது என்று விமர்சிக்கின்றனர்.
நான் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன். அது என் தனிப்பட்ட முடிவு. இந்த படத்தைத்தான் பார்க்க வேண்டும் என்று, இங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி கட்டாயப்படுத்தினால், திரைக்கு வரும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டராகி விடும். எல்லோருக்குள்ளும் ‘கிரே’ கேரக்டர் இருக்கும். அப்படிப்பட்ட கேரக்டரையே திரையில் காட்டியுள்ளனர். ஒருவிதத்தில் ‘அனிமல்’ படத்தை மக்கள் கொண்டாடி இருக்கின்றனர் என்றே தோன்றுகிறது. அதனால்தான் வசூல் எகிறியுள்ளது. ஒரு படம் மக்களுக்கு பிடிப்பதும், பிடிக்காததும் அவர்களின் தனிப்பட்ட விஷயம்.
படத்தில் ஏற்றுள்ள கேரக்டரே நிஜ கேரக்டர் என்று நினைக்கக்கூடாது. விரைவில் ‘அனிமல் 2’ உருவாகும் என்று சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளார். இதிலும் ரன்பீர் கபூர் நடிக்கிறார்’ என்றார். அலியா பட் கணவர் ரன்பீர் கபூருக்கு ஐஸ் வைத்து பேசி இருப்பதால், 2ம் பாகத்திலும் ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று தெரிகிறது.