லிஸ்பன்: அடுத்த கார் பந்தயத்திற்காக போர்ச்சுகல் நாட்டுக்கு சென்றுள்ளார் அஜித் குமார். சினிமாவில் நடித்தபடி கார் ரேஸிலும் கவனம் செலுத்துகிறார் அஜித். அதன்படி கடந்த வாரம் துபாயில் 3 நாட்கள் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி பங்கேற்றது. இதில் அவரது அணி சிறப்பாக விளையாடி 3வது இடத்தை பிடித்தது. கார் பந்தயத்தில் அஜித்தும் பங்கேற்று கார் ஓட்டுவதாக இருந்தார்.
ஆனால் உடல் நலம் மற்றும் அணியின் நலனை கருத்தில் கொண்டு அவர் கேப்டனாக மட்டும் செயல்பட முடிவு செய்தார். அதன்படி இந்த பந்தயங்களில் விளையாடி அவரது அணி சாதித்தது. இப்போது அடுத்தகட்டமாக அவர் நேற்று முன்தினம் போர்ச்சுகல் சென்றுவிட்டார். அங்கு இன்றும் நாளையும் நடைபெறும் பந்தயங்களில் அவரது அணி போட்டியிடுகிறது.
அடுத்ததாக இத்தாலி நாட்டில் உள்ள முகெல்லோ (Mugello)-வில் வரும் மார்ச் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் கார் ரேஸில் பங்கேற்க அஜித் அணியினர் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இதையடுத்து பெல்ஜியமில் உள்ள Spa-Francorchamps-ல் கார் ரேஸில் கலந்து கொள்ளவுள்ளனர். இங்கு ஏப்ரல் மாதம் பந்தயம் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 6ம் தேதி அஜித்தின் விடா முயற்சி படமும் ஏப்ரல் மாதத்தில் 14ம் தேதியில் ‘குட் பேட் அக்லி’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.