கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் விஜித், கண்மணி தம்பதி, வீட்டில் தங்கள் மகளை கவனித்துக்கொள்ள தேவயானியை நியமிக்கின்றனர். தேவயானியின் அதீத அன்பும், அக்கறையும் சிறுமியை பாசத்தில் கட்டிப்போடுகிறது. அப்போது அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கி குடியேற முயற்சி செய்த விஜித், கண் மணிக்கு விசா கிடைக்கிறது. சிறுமி பிரிவதை நினைத்து தேவயானி வருத்தப்பட, திடீரென்று சிறுமி காணாமல் போகிறார். தங்கள் அமெரிக்க பயணத்தை தடுக்க நெருங்கியவர்களே சதி செய்திருக்கலாம் என்று நினைக்கும் விஜித், கண்மணி போலீசில் புகார் கொடுக்கின்றனர். அப்போதும் குழைந்தை கிடைக்காத நிலையில், பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
முதன்மை வேடத்தில் தோன்றும் தேவயானி, அழுத்தமான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கும், சிறுமிக்குமான பந்தம் உருக வைக்கிறது. காதல் தம்பதியாக விஜித், கண்மணி இயல்பாக நடித்துள்ளனர். அவர்களின் மகளாக ஜி.வி.அஹானா அஸ்னி, சற்று வளர்ந்த மகளாக நிஹாரிகா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இளவரசு, ராஜ் கபூர், வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன் ஆகியோரும் யதார்த்தமாக நடிததுள்ளனர்.
மனித உணர்வுகளை ஆர்.பி.குருதேவ் கேமரா துல்லியமாக பதிவு செய்துள்ளது. நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனத்தை ஈர்க்கிறது. ஹிமேஷ் பாலாவின் வசனம் ‘நறுக்’. பணம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் இல்லை என்ற கருத்தை சொன்ன இயக்கு னர் சிவா ஆறுமுகம், முதியோர் இல்லங்கள் மற்றும் இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பில் எவ்வளவு கவனத்தை செலுத்த வேண்டும் என்ற பாடத்தை நடத்தி இருக்கிறார். நாடக பாணியிலேயே நகரும் காட்சிகளை சற்று துரிதப்படுத்தி இருக்கலாம்.