இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் சித்தார்த்தை அணியில் இருந்து நீக்கி, புதியவருக்கு வாய்ப்பு தர கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது. எனவே, சித்தார்த் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள சித்தார்த் விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே அவர் ஓய்வுபெற விரும்புகிறார்.
தண்ணீரில் இருந்து உருவாக்கப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாக மாற்றி வாகனங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன், தனது கண்டுபிடிப்புக்கு ஒன்றிய அரசிடம் அங்கீகாரம் கேட்கிறார். அவரது மனைவி நயன்தாரா, தனக்கு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக சிறப்பு மருத்துவ சிகிச்சை மேற்கொள்கிறார். இந்நிலையில், சித்தார்த் மகனை வைத்து மாதவன் விளையாடும் ஆட்டம், பல்வேறு விபரீத விளைவுகளுக்கு காரணமாகிறது. ஒவ்வொருவரும் தங்கள் லட்சியத்தை அடைய பயணிக்கும்போது சந்திக்கும் பிரச்னைகள் என்ன? அதிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்களா என்பது மீதி கதை.
படத்தின் மையப்புள்ளியாக மாதவன், சித்தார்த், நயன்தாரா இருக்கும்போது, சைடில் மீரா ஜாஸ்மின், அவரது மகன் பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ், மோகன் ராமன், தீபா சங்கர் ஆகியோரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் விராஜ் சிங் கோஹிலின் பணி பாராட்டுக்குரியது. பாடகி சக்தி கோபாலன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, அதிக பலம் சேர்த்துள்ளது. தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். கடத்தல் சம்பவங்களின் நம்பகத்தன்மையும், லாஜிக்கும் ஆங்காங்கே இடிக்கிறது.