சென்னை: ரூ.4 கோடியெல்லாம் வைத்துக்கொண்டு படம் எடுக்க வர வேண்டாம் எனக் கூறிய விஷாலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சமீபத்தில் விஷால் பேட்டியில் கூறும்போது, ரூ.1 கோடி, ரூ.4 கோடி வைத்துக்கொண்டெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் எடுக்க வர வேண்டாம் என சிறு முதலீட்டு படங்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. சிறு படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் விஷாலின் கருத்தை கண்டித்து வருகிறார்கள். மார்க் ஆண்டனி என்ற ஒரு படம் ஓடியதால் விஷால் இப்படி பேசுகிறார். அவரும் சிறு பட்ஜெட் படம் மூலம்தான் ஹீரோ ஆனார்.
ஆண்டுக்கு உருவாகும் பெரும்பாலான படங்கள் சிறுபடங்கள்தான். அதன் மூலம்தான் சினிமா தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது என பல தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, ‘சின்ன படங்களும் சினிமாவைத் தாங்கிதான் பிடிக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்கென வியாபாரம் இருந்ததில்லை. சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. சிறுபடங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு. அதுக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்தில் உடன்பாடு இல்லை’ என்றார்.