ஐதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ரூ.5.4 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை வாங்கியுள்ளார். ‘சர்காருவாரி பாட்டா’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் படம் ‘குண்டூர் காரம்’. த்ரிவிக்ரம் னிவாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் அருகே ஜன்வாடாவில் நடந்து வருகிறது. இந்த படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.
இந்நிலையில், மகேஷ் பாபு ரேஞ்ச் ரோவர் எஸ்வி சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். ரூ.5.4 கோடி மதிப்புள்ள இந்த காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர்கள் மோகன்லால், சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ரேஞ்ச் ரோவர் காரை வைத்துள்ளனர். ஆனாலும் மகேஷ் பாபு வாங்கியுள்ள கோல்டன் கலர் மாடல் அரிய வகையானது என கூறப்படுகிறது. மேலும், ஐதராபாத்தில் உள்ள ஒரே கோல்டன் ரேஞ்ச் ரோவர் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.