ஹரீஷ் கல்யாணுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அடுத்த ஊரைச் சேர்ந்த ‘அட்ட கத்தி’ தினேஷ் பெயிண்டர் என்றாலும், மனைவி சுவாசிகா விஜய்க்கு தெரியாமல், ‘பவர் பாய்ஸ்’ என்ற அணிக்காக கிரிக்கெட் விளையாடி ஜெயிக்கிறார். ஹரீஷ் கல்யாண், தினேஷின் மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை காதலிக்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக்கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்த நிலையில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
கிராமங்களில் நடக்கும் எளிமையான, வலிமையான கிரிக்கெட் போட்டியை, அந்த கிரவுண்டில் இருந்து பார்க்கும் உணர்வை படம் ஏற்படுத்தியுள்ளது. பொருத்தமான கேரக்டரில் புகுந்து விளையாடிய ஹரீஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியுடனான காதலை இயல்பாக கையாண்டுள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கிராமத்து அழகு தேவதை மட்டுமல்ல, நடிப்பிலும் கெத்து காட்டியிருக்கிறார்.
விஜயகாந்த் ரசிகராக வந்து, கிரிக்கெட் மைதானத்தில் அதகளம் செய்யும் ‘அட்ட கத்தி’ தினேஷ், இதுபோன்ற கேரக்டர்களில் இனி அதிகமாக வலம் வருவது உறுதி. மனைவி சுவாசிகா விஜய் அப்படியே இயல்பான குடும்பப் பெண்ணாக வாழ்கிறார்.
கீதா கைலாசம், காளி வெங்கட், பாலசரவணன், ஜென்சன் திவாகர், டிஎஸ்கே என அனைவரும் கச்சிதம். இயல்பான மனிதர்களின் வாழ்க்கையையும், கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாக உணர்வையும், காதலர்களின் இயல்பு நடவடிக்கைகளையும் கண்முன் நிறுத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். கிரிக்கெட் போட்டியை சுவாரஸ்யமாகப் படமாக்கியுள்ளார். பாடல்களிலும், பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறார், ஷான் ரோல்டன். குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, அப்படியே சாதி அரசியலையும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.