கடந்த 2021ல் பி.சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் மகத்தான சாதனை படைத்த பான் இந்தியா படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலை காப்பியடித்து, தற்போது துருக்கியை சேர்ந்த பாடகி ஒருவர் ஆல்பம் வெளியிட்டுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியை சேர்ந்த அதியே என்ற பாடகி ஆங்கிலம் மற்றும் துருக்கியில் பாடல்கள் பாடி வருகிறார். கடந்த 2024ல் அவர் வெளியிட்ட ‘அன்லயானா’ என்ற ஆல்பத்திலுள்ள பாடலின் டியூன், ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலை போல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறுகையில், ‘நம் நாட்டில் உருவாகும் இசை, இந்த உலகம் முழுவதும் கவனிக்கப்படுவது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘அன்லயானா’ என்ற பாடலை நானும் கேட்டேன். அந்த பாடகி மீது நான் வழக்கு தொடரலாமா என்று யோசித்து வருகிறேன்’ என்றார். தற்போது இப்பாடல் டிரெண்டாகி வரும் நிலையில், ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலை போலவே இருக்கிறதே என்று ரசிகர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.