சென்னை: தெலுங்கு முன்னணி ஹீரோ நாகார்ஜூனாவின் மூத்த மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017ல் காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தா, 4 வருட குடும்ப வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2021ல் பரஸ்பர விவாகரத்து மூலம் நாக சைதன்யாவை விட்டு தனியாக பிரிந்து சென்றார். பிறகு நாக சைதன்யா, ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலாவை காதலித்து 2வது திருமணம்
செய்துகொண்டார். சமந்தா இதுவரை 2வது திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணமானவர். ஆனால், சமந்தாவுடன் தன்னை இணைத்து வெளியாகும் செய்திகளை இதுவரை அவர் மறுக்கவில்லை. சமந்தாவும் மறுப்பு தெரிவித்து பதிவிடவில்லை.
தெலுங்கில் 2010ல் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஜோடி சேர்ந்து நடித்த படம், ‘யே மாய சேசாவே’. அப்போது இருவரும் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்ததை நினைவுகூறுகின்ற வகையில், சமந்தா தனது முதுகில் ‘யே மாய சேசாவே’ என்ற தலைப்பின் சுருக்கத்தை ‘YMC’ என்ற டாட்டூவாக குத்தியிருந்தார். தங்களின் காதல் சின்னமான அந்த டாட்டூவை தற்போது சமந்தா நீக்கியுள்ளார். விவாகரத்து பெற்று 4 வருடங்கள் கழித்து டாட்டூவை
நீக்கியுள்ளதை பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை சமந்தா மறுமணத்துக்கு ரெடியாகி விட்டார் போலும் என்று பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் சமந்தா தனது நிச்சயதார்த்த மோதிரத்தையும், திருமண ஆடையையும் மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.