இயக்குனர் அமீர் தயாரித்து நடித்துள்ள படம், ‘மாயவலை’. சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சாய் தீனா, வின்சென்ட் அசோகன், சரண் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படம் குறித்து பேசிய சஞ்சிதா ஷெட்டி, ‘எனது சினிமா கேரியரில் ‘சூது கவ்வும்’, ‘விநோதய சித்தம்’ ஆகிய படங்களுக்குப் பின்பு, என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் படமாக ‘மாயவலை’ உருவாகியுள்ளது. இப்படத்துக்கு என்னை இயக்குனர் வெற்றிமாறன் சிபாரிசு செய்தார்.
இந்த நேரத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் சொன்னதால் கதை கேட்காமல் நடித்தேன். சத்யாவுடன் கல்லூரி கால நண்பர் போல் நெருக்கமாக நடித்துள்ளேன்’ என்றார். அப்போது குறுக்கிட்ட அமீர், ‘படத்தில் சத்யாவுடன் சஞ்சிதா அந்தரங்கமான சில காட்சிகளில் நடித்துள்ளார். அதைத்தான் நெருக்கமாக நடித்திருப்பதாக சொல்கிறார். இப்படம் சஞ்சிதா கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்’ என்றார்.