சென்னை: ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி.செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள படம், ‘கொம்புசீவி’. சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் தார்னிகா, சுஜித் சங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்துள்ளனர். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை பற்றி பேசும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
இதையொட்டி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து, புதிய ஆடைகள் வழங்கி கவுரவித்த சண்முகபாண்டியன் கூறுகையில், ‘இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே என்பதை தனது லட்சியமாக நினைத்து செயல்பட்டவர், எனது தந்தை விஜயகாந்த். இன்று அவரை பின்பற்றி, ‘கொம்புசீவி’ படக்குழுவினருக்கு என்னால் முடிந்ததை செய்துள்ளேன்’ என்றார்.
‘சகாப்தம்’, ‘மதுரவீரன்’, ‘படை தலைவன்’ ஆகிய படங்களில் நடித்த அவர், முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில், ‘என் தந்தையை ‘படை தலைவன்’ படத்தில் ஏஐ மூலம் பார்த்தபோது அழுதுவிட்டேன். அவர் எங்களுடன் இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. எங்களை அவர் ஆசிர்வதிக்கிறார் என்ற நம்பிக்கையில் தொடந்து பயணித்து வருகிறோம்’ என்றார்.