சென்னை: சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், ஆர்.ஜி.துஷ்யந்த், மன், அர்ஜூனன், பூர்ணிமா பாக்யராஜ், தேவதர்ஷினி நடித்துள்ள படம், ‘தீர்க்கதரிசி’. ஸ்ரீசரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ் குமார் திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.பாலசுப்பிரமணியன் இசை அமைத்துள்ளார். பி.ஜி.மோகன், எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்கியுள்ளனர். இப்படம் குறித்து சத்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: ‘தீர்க்கதரிசி’ படத்தில், பின்னால் நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் கொண்ட கேரக்டரில் நடிக்கிறேன். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நான் யார் என்று தெரியும்.
படத்தில் நடிக்கும் மற்ற கேரக்டர்களுக்கு நான் தெரிய மாட்டேன். என் குரல் மட்டுமே கேட்கும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் மட்டுமே. கதையும், அதை திரையில் சொல்லும் பாணியும் வித்தியாசமாக இருந்தால் ஜெயிக்கலாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கிறேன். மீண்டும் வில்லனாக நடிக்க அழைப்பு வந்துள்ளது. வெப்தொடரிலும் நடிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அஜ்மல், ஜெய்வந்த், ஆர்.ஜி.துஷ்யந்த், அர்ஜூனன், இயக்குனர்கள் பி.ஜி.மோகன், எல்.ஆர்.சுந்தரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.