மும்பை: பாலிவுட்டிலுள்ள முன்னணி நடிகர் சல்மான்கான், சில வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடந்த இந்தி பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது, அபூர்வ வகை மான்களை வேட்டையாடி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அந்த மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். இதனால், டெல்லியை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறான்.
கடந்த ஆண்டு மும்பையிலுள்ள சல்மான்கான் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். மும்பை புறநகர் பகுதியிலுள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்ற சல்மான்கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்த சதி கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவங்களை தொடர்ந்து சல்மான்கான் மேலும் தனது பாதுகாப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். மும்பை போலீசார் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். தற்போது அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தனது வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடியை பொருத்தியுள்ள சல்மான்கான், வெளியிடங்களுக்கு குண்டு துளைக்காத காரில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். படப்பிடிப்பில் அவருக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தனது சொந்த செலவில் அவர் சில பாதுகாவலர்களை நியமித்துள்ளார். தனது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் விதமாக, இன்னொரு புல்லட் புரூப் கார் வாங்கியுள்ளார். Mercedes Maybach GLS 600 என்ற காரின் விலை 3.40 கோடி ரூபாய். மணிக்கு 240 கி.மீ வேகத்தில் செல்லும் இது, தானியங்கி கியர் பாக்ஸ் கொண்டது.