சென்னை: ‘விடுதலை’ 2 பாகங்கள், ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்களை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்துள்ள ‘மாமன்’ படத்தை ‘புரூஸ்லீ’, ‘விலங்கு’ பிரசாந்த் பாண்டியராஜ் எழுதி இயக்கியுள்ளார். ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பாலசரவணன், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் சிதம்பரம் வெளியிடுகிறார். வரும் 16ம் தேதி ரிலீசாகும் இப்படம் குறித்து சூரி கூறியதாவது: 16 வருடங்களாக என்னுடன் பயணிக்கும் குமார் தயாரித்துள்ளார். ராஜ்கிரண் சார் நடிக்க ஒப்புக்கொண்டது எங்களுக்கு பெருமை. இசை அமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பை தமிழ் திரையுலகிற்கு வரவேற்கிறேன்.
சூரி மீது கொண்ட பேரன்புக்காகவும், கதை என்னை கவர்ந்ததாலும், பாடல்கள் எழுத சம்பளம் வேண்டாம்’ என்று சொன்ன விவேக்கிற்கு நன்றி. ‘சீமராஜா’ படத்துக்காக இயக்குனர் பொன்ராம் என்னை சிக்ஸ்பேக் வைக்க சொன்னார். 6 மாதங்கள் கடினமாக உழைத்தேன். என் மனைவியும் உதவினார். படத்தை பார்க்க தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றேன். சிக்ஸ்பேக் காட்சி 59 விநாடிகளே இடம்பெற்றது. எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அதுதான் என்னை இந்தளவு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது. ‘மாமன்’ கதையை நான் எழுதியுள்ளேன். இப்படத்தில் ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா. பொண்டாட்டிதான் சாமி’ என்ற வசனம் நெகிழவைத்தது. என் அக்கா சுவாசிகாவின் மகன் பிரகீத் சிவன் என்ற சிறுவனுக்கும், தாய் மாமனான எனக்கும் இடையிலான பாசத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது.