சென்னை: சினிமா துறையில் பாலியல் தொந்தரவு உண்டா என்ற கேள்விக்கு நடிகை ரெஜினா பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘என் வாழ்நாளில் ஒருமுறை இதுபோன்ற அனுபவத்தை நான் சந்தித்திருக்கிறேன். தொலைபேசி அழைப்பின் மூலம் அட்ஜெஸ்மென்ட் செய்யலாமா என்று திரையுலகை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது எனக்கு 20 வயதுதான். அதன் அர்த்தம் அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் சம்பளத்தில் அட்ஜெஸ்மென்ட் செய்யலாமா என என்னிடம் கேட்கிறார் என்று நினைத்தேன்.
எனது மேலாளர் அவரிடம் இதைப் பற்றி பேசுவார் என்று நான் அவரிடம் சொன்னேன், இது எனது ஊதியம் பற்றி மட்டுமே என்று நினைத்து கொண்டேன். அவர் வேறு வகையான அட்ஜெஸ்மென்ட் பற்றி பேசுகிறார் என்பதை பின்னர் உணர்ந்தேன். அந்த சம்பவத்திற்குப் பிறகு, தனிப்பட்ட முறையில் என் வாழ்நாளில் இதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததில்லை. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு இருப்பார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது பொய்யாகவும் இருக்கலாம். நிறைய பெண்கள் கதைகளை உருவாக்க பொய் சொல்வார்கள். உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்’ என்றார்.