மும்பை: பாலிவுட் வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் ஸ்ரத்தா கபூர். இந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையா உள்ள இவர், பிரபாஸ் ஜோடியாக ‘சாஹோ’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் புனேயில் உள்ள ஒரு ஷோரூம் திறப்பு விழாவுக்கு மாலை நேரத்தில் ஸ்ரத்தா கபூர் சென்றிருந்தார். அங்கு முதலில் மீடியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே குழுமியிருந்தனர். ஸ்ரத்தா கபூர் வருவதை அறிந்த அப்பகுதியினர் திடீரென விழா இடத்தில் திரள ஆரம்பித்துவிட்டனர். பாதுகாப்புக்கு 2 போலீஸ்காரர் மட்டுமே இருந்த நிலையில் இத்தனை பேர் சேர்ந்ததால் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஸ்ரத்தா கபூர் அங்கு வந்ததும், பவுன்சர்கள் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்று விழா இடத்தில் சேர்த்தனர்.
அவர் அங்கு ரிப்பன் கட் செய்து நிகழ்ச்சி நடத்தி முடித்த பிறகு வெளியேறும்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பை மீறி அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். இதில் பாதுகாவலர்கள் ஓரம்கட்டப்பட்டனர். ஸ்ரத்தா கபூர் தனியாளாக அங்கு சிக்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டத்தில் இளைஞர்கள் சிலர், ஸ்ராத்தாவை கண்ட இடத்தில் தொட்டனர். இதனால் பதறிப்போன அவர் தனது உதவியாளர்களை அழைக்க ஆரம்பித்தார். அப்போது அவர்கள் வந்து, பவுன்சர்களையும் வரவழைத்து, ஸ்ரத்தாவை கூட்டத்திலிருந்து மீட்டனர். பின்னர் பெரும் போராட்டத்துக்கு பிறகு நெரிசலில் இருந்து அவரை மீட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.