மும்பை: தமிழில் ‘சிருங்காரம்’, ‘காற்று வெளியிடை’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘சைக்கோ’, ‘ஹே சினாமிகா’ மற்றும் இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள அதிதி ராவ் ஹைதாரி, நேற்று முன்தினம் தனது 37வது பிறந்தநாள் விழாவை மும்பையில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், அவருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்படும் சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு, ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பார்ட்னர்’ என்று தெரிவித்து, ஆங்கிலத்தில் கவிதை எழுதி வெளியிட்டுள்ளார். அப்பதிவில், ‘நாம் ஒருவரை ஒருவர் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டன. விரைவில் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார். அதற்கு அதிதி ராவ் ஹைதாரி, ‘ஆமாம், நாம் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டன. நீங்கள் ஒரு கவிஞர் என்று எனக்கு தெரியாது.
திறமையான உங்களைப் பற்றி நான் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது அவர்கள் காதலிப்பதாக சில தகவல்கள் வெளியானது. பிறகு அவர்கள் மும்பை வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. சினிமா மற்றும் பொதுவிழாக்களில் அவர்கள் ஜோடி சேர்ந்து பங்கேற்ற போட்டோக்கள் அவ்வப்போது வைரலாகி வந்தன. என்றாலும், அதிதி ராவ் ஹைதாரியைக் காதலிக்கும் விஷயம் குறித்து இதுவரை சித்தார்த் வெளிப்படையாகப் பேசியதில்லை. 2009ல் சத்யதீப் மிஷ்ராவை திருமணம் செய்த அதிதி ராவ் ஹைதாரி, 2013ல் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.