சென்னை: பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் கிசு கிசு கிளம்பிய நிலையில் இது தொடர்பாக ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார். மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் ஜெயம் ரவி நேற்று கூறியதாவது: கெனிஷா ஆன்மிகவாதி, சைக்காலஜிஸ்ட். அவருக்கு பெற்றோர் கிடையாது. மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். அவருடன் என்னை இணைத்துப் பேசுவது வருத்தமாக இருக்கிறது. பேசுபவர்களுக்குதான் அது அசிங்கம். நாங்கள் சேர்ந்து ஆன்மிக சென்டர் ஒன்றை தொடங்கவும் பேசினோம்.
அதையெல்லாம் தடுக்க இது நடக்கிறதா என்பது தெரியவில்லை. அதற்குள் என் மீது சேற்றை வாரி இறைக்க சிலர் நினைக்கிறார்கள். அதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. காரணம், என்னைப் பற்றி, எனக்கு இந்த இடத்தை கொடுத்த மக்களுக்கு தெரியும். விவாகரத்து பற்றி தனக்கு எதுவும் தெரியாது, அது எனது தன்னிச்சை முடிவு என ஆர்த்தி சொல்வது வியப்பாக உள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பே நான் அவருக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பிவிட்டேன். அவர்கள் வீட்டாரும் என்னையும் ஆர்த்தியையும் அழைத்து பேசினார்கள். எனது வீட்டிலும் பேசினார்கள். இதெல்லாம் நடக்கும்போது, எனக்கு எதுவும் தெரியாது என அவர் சொல்வதில் உண்மையில்லை. எனது 2 மகன்களும் என்னுடன் எப்போதும் போல் இருப்பார்கள். அவர்களை எப்போதும் கைவிட மாட்டேன்.
ஜூன் மாதம் கூட மூத்த மகனின் பிறந்த தினத்தை அவனுடன் சேர்ந்து கொண்டாடினேன். ஆர்த்தியை பிரிவது பற்றியும் மகனிடம் சொன்னேன். அம்மாவுடன் சேர்ந்து இருக்கலாமே என்றான். அவன் சின்ன பையன் என்பதால் அப்படி சொல்கிறான். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்குத்தானே தெரியும். மற்றவர்கள் போல் இந்த விஷயத்தில் நடக்கக் கூடாது என பார்க்கிறேன். எனது மகன்களுக்காக நான் அமைதியாக இருக்கிறேன். நான் வீட்டை விட்டு போனது உண்மைதான். எனது காரை எடுத்துக்கொண்டு, பணம் கூட எடுக்காமல்தான் சென்றேன். இந்த விவகாரம் எனது வாழ்க்கையில் தடைக்கல் கிடையாது. ஸ்பீட் பிரேக்கர்தான். அதனால் இதை கடந்தும் வருவேன். இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.