சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்திலிருந்து ‘சிக்கிடு’ பாடல் வெளியானது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘கூலி’. ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்பட பலர் நடிக்கிறார்கள். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்குகிறார்.
‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ படங்களின் மாபெரும் வெற்றிகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது. இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இந்நிலையில் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் திரையிட உள்ளனர். படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகும் என டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூலி படத்தின் இந்த பாடலுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதன்படி நேற்று மாலை 6 மணியளவில் இந்த படத்தில் இடம்பெறும் ‘சிக்கிடு’ பாடல் வீடியோ வெளியானது. அதில், ரஜினிகாந்த் பெரும் பட்டாளத்துடன் ஆடிப்பாடுகிறார். அதே பாடலின் புரமோஷன் காட்சிகளில் அனிருத்துடன் டி.ராஜேந்தர், சாண்டி மாஸ்டர் இணைந்து ஆடுகின்றனர். இந்த பாடலை கேட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். இணையதளத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.