சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளர், பாடகருமான ஏ.ஆர்.ரெஹைனா உருவாக்கியுள்ள இசை ஆல்பம் ‘மாத்திக்கலாம் மாலை’. மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார். மணி வி.நாயர் இயக்கியுள்ள இந்த ஆல்பத்தில் சனூஜ், நடிகை கோமல் சர்மா நடித்துள்ளனர். ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை சுகாசினி, இயக்குநர் மாதேஷ், பாடகி பாப் ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது, ‘இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது. பாடகர்கள், இசையமைப்பாளர்கள் நிறைய பேர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வருமானம் எங்கே இருக்கிறது? உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே தான் நாம் திரையுலகையை சார்ந்து அதை மட்டுமே நம்பிக்கொண்டே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். பாடல் என்பது சினிமாவில் இருந்தால் என்ன, தனி ஆல்பமாக இருந்தால் என்ன? ரசிகர்கள் எப்போதும் கேட்கத்தான் போகிறார்கள். இதில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு டீனேஜ் பெண் போல தான் நான் பாடி இருக்கிறேன்’ என்றார்.