தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான லால், கடற்கரை கெஸ்ட் ஹவுசில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் சரவணனுடன் இணைந்து சப்-இன்ஸ்பெக்டர் கதிர் விசாரிக்கிறார். லால் கொல்லப்பட்ட இடத்தில், கைத்துப்பாக்கியுடன் கவுரி கிஷன் இருக்கிறார். இந்நிலையில், லாலை கொலை செய்ததாக வெவ்வேறு காவல் நிலையங்களில் 7 பெண்கள் சரணடைந்து, அனைவரும் ஒரேமாதிரி வாக்குமூலம் அளிக்கின்றனர். கொலை வழக்கில் கவுரி கிஷனுடன் சேர்த்து 8 பெண்கள் சரணடைந்தது போலீசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது.
துப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர். லால் கொலைக்கு என்ன காரணம்? கொன்றது யார் என்பதை கதிர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது, பரபரப்பான கிளைமாக்ஸ். ‘சுழல்’ வெப்தொடரை வழங்கிய புஷ்கர், காயத்ரி குழுவினர், ‘சுழல் 2’ வெப்தொடரின் 8 எபிசோடுகளையும் சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பு குறையாமல் வழங்கியுள்ளனர். சிறையில் சித்திரவதையை அனுபவித்துக்கொண்டே ஐஸ்வர்யா ராஜேஷ் போடும் திட்டங்களும், இன்ஸ்பெக்டர் சரவணன் தரும் எதிர்பாராத திருப்பமும், லால் பற்றிய பல்வேறு சந்தேகங்களும் சபாஷ்.
லால் மனைவி ‘புது நெல்லு புது நாத்து’ அஸ்வினி நம்பியார், மகன் அமித் பார்கவ், கார் டிரைவர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கதிர், ‘கயல்’ சந்திரன், மஞ்சிமா மோகன், சம்யுக்தா விஸ்வநாதன், ேமானிஷா பிளெஸ்சி, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, ஷிரிஷா, கலைவாணி பாஸ்கர், சாந்தினி தமிழரசன், கவுரி கிஷன் உள்பட அனைவரும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
சிறுமிகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், அதிகார வர்க்கத்தின் நியாயமற்ற போக்கு போன்ற சமூகப் பிரச்னைகளை அக்கறையுடன் சொல்லியிருக்கும் இந்த வெப்தொடருக்கு புஷ்கர், காயத்ரி தம்பதி கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ‘குற்றம் கடிதல்’ பிரம்மா.ஜி, சர்ஜூன் கே.எம் இயக்கியுள்ளனர். ஆபிரகாம் ஜோசப்பின் ஒளிப்பதிவு, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளது. சாம் சி.எஸ்சின் பின்னணி இசை, ஆக்ரோஷமாக இருக்கிறது. எடிட்டர் ரிச்சர்ட் கெவின், காட்சிகளை நச்சென்று கத்தரித்துள்ளார். ‘சுழல் 2’, அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.