மும்பை: தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கிய அவர், பிறகு ஹீரோயினாக மாறி பல ஹிட் படங்களைக் கொடுத்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார். 1983ல் இந்தியில் வெளியான ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தின் ஹிட்டுக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். தொடர்ந்து இந்தியில் நடித்த அவர், தமிழ் உள்பட மற்ற மொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதல் திருமணம் செய்துகொண்டு மும்பையில் நிரந்தரமாக குடியேறினார்.
அவருக்கு ஜான்வி, குஷி ஆகிய மகள்கள் இருக்கின்றனர். தற்போது அவர்கள் இருவரும் பல்வேறு மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். அஜித் குமார் உள்பட பல முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2018ல் துபாய் சென்ற தேவி, அங்குள்ள நட்சத்திர ஓட்டல் பாத்ரூமில், பாத் டப்பில் மூழ்கி அகால மரணம் அடைந்தார். இந்நிலையில், திரையுலகில் மாபெரும் சாதனைகள் படைத்த தேவியைக் கவுரவப்படுத்தும் விதமாகவும், அவருடைய நினைவைப் போற்றும் விதமாகவும், மும்பையிலுளள் லோகண்ட்வாலா சந்திப்பு ஒன்றுக்கு ‘தேவி கபூர் சவுக்’ என்று மும்பை மாநகராட்சி பெயர் சூட்டியுள்ளது. காரணம், இப்பகுதியில் ஸ்ரீதேவி வசித்து வந்தார். அவரது இறுதி ஊர்வலமும் இந்த வழியாகவே சென்றது.