தமிழ் சினிமாவை பொருத்தவரை போதை வழக்குகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில துணை நடிகர், நடிகைகள்தான் பிடிபட்டு வந்தார்கள். முதல் முறையாக பிரபல நடிகர் ஒருவர் சிக்கியிருப்பது தமிழ் சினிமா உலகில் பலரை கலக்கம் அடையச் செய்துள்ளது.
சென்னை, ஜூன் 25: தமிழ் திரையுலகில் போதை கலாசாரம் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவின் ஐடி பிரிவிலிருந்த உறுப்பினரான பிரசாத் போதை வழக்கில் கைதானார். விசாரணையின்போது, அவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு பலமுறை கோகைன் சப்ளை செய்ததாக தெரிவித்தார். ஸ்ரீகாந்த் ஒரு கிராம் போதைப்பொருளை ரூ.12,000க்கு வாங்கியதாகவும், கிட்டத்தட்ட 40 முறை வாங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த பரிவர்த்தனைகளுக்காக ஸ்ரீகாந்த் கூகிள் பே மூலம் ரூ.4.72 லட்சத்தை பரிமாற்றம் செய்ததாக பணம் செலுத்தும் பதிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ பரிசோதனையின் முடிவுகளில் ஸ்ரீகாந்த் கொகைன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அடுத்தபடியாக நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் இதில் அடிபடுகிறது. மேலும் இந்த வழக்கில் பல நடிகர்களின் பெயர்கள் தொடர்ந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை போதை வழக்குகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில துணை நடிகர், நடிகைகள்தான் பிடிபட்டு வந்தார்கள். முதல் முறையாக பிரபல நடிகர் ஒருவர் சிக்கியிருப்பது தமிழ் சினிமா உலகில் பலரை கலக்கம் அடையச் செய்துள்ளது. தமிழ் சினிமா துறையில் நடைபெறும் பல நைட் பார்ட்டிகளில் போதைப் பொருள் சர்வசாதாரணமாக புழங்குவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாடகியும் நடிகையுமான சுசித்ராவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். வாரம்தோறும் வீக்எண்ட் பார்ட்டிகளை பல சினிமா பிரபலங்கள் நடத்துகிறார்கள். அதிலும் கொகைன், கஞ்சா போன்ற போதை வஸ்துகள் இருக்கும் என பெயர் சொல்ல விரும்பாத நடிகர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீகாந்தை போல், போதை வழக்கில் இதுவரை சிக்கிய சில முக்கிய பிரபலங்கள் பற்றிய விவரம்:
மே 2025 – அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதை பொருள் வைத்திருந்ததாக போலீசாரிடம் சிக்கினார். ஏப்ரல் 2025 – கஞ்சா பயன்படுத்திய பிரபல மலையாள இயக்குனர்கள் காலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா கைது செய்யப்பட்டனர். ஜூன் 2024 – தெலுங்கு நடிகை ஹேமா பெங்களூருவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹேமா உள்ளிட்ட 86 பேர் போதை பொருள் எடுத்து கொண்டு கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிசம்பர் 2022 – போதை வழக்கில் கெல்வின் என்பவர் ஐதராபாத்தில் கைதானார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி ஆகியோரும் நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், இயக்குனர் புரி ஜெகன்னாத் உள்ளிட்டோரும் சிக்கினர். ஆகஸ்ட் 2021 – பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை வழக்கில் கைதானார். தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்துக்கு போதைப் பொருளை அவர் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூரிடமும் விசாரணை நடந்தது. அக்டோபர் 2021 – சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்திய ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 2020 – ஆகஸ்ட் 20-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நவி மும்பையில் போதைப் பொருள் விற்பனை செய்த ஹெச்.ஏ.சௌத்ரி, ஆர்.பத்ரே ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி (நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா) உட்பட 15 பேரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுபோல் போதையில் சிக்கும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சினிமா துறையில் போதை பயன்பாடு தலைவிரித்தாடுகிறது. சினிமா துறையில் பாலியல் கொடுமைகளை தடுக்க ஹேமா கமிட்டியை அமைத்தது போல், எல்லா மொழி சினிமா துறையிலும் போதை ஆதிக்கத்தை முழுமையாக தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.