Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மேடை நாகரிகம் தேவை…! ‘ 2K லவ் ஸ்டோரி ‘ பட விழாவில் இயக்குநர் மிஷ்கினுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம்

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. கிரியேட்டிவ் எண்டர்டெயிண்ட்மெண்ட் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய அருள் தாஸ் ‘பாட்டில் ராதா‘ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அநாகரிகமாக கெட்ட வார்த்தைகள் பேசிய மிஷ்கின் குறித்து விமர்சனங்களை வைத்திருப்பது தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. படக்குழுவினர் ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருக்க தொடர்ந்து மைக்கை பிடித்த அருள் தாஸ் , தம்பி சுசி தான் இந்த மேடைக்கு நான் வரக்காரணம்.

நான் நடிகனானது நான் மகான் அல்ல படத்தில் தான். என் பொருளாதாரம் உயர்ந்து, இந்த நிலைக்கு நல்ல நடிகனாக வரக் காரணம் சுசி தான். அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு தந்து, என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது, நான் நன்றாக இருக்கக் காரணம் சுசிதான். சுசி எப்போது கூப்பிட்டாலும், எத்தனை சின்ன பாத்திரம் என்றாலும் நான் போய் விடுவேன். சுசிக்கு தொழில் சுத்தமாகத் தெரியும், அவர் மிகத் திறமைசாலி, அதனால் தான் அவனால் இத்தனை சீக்கிரம் படத்தை முடிக்க முடிகிறது. இந்தப்படத்தில் எனக்குத் தெரிந்த பலர் நடித்துள்ளனர். எனக்குத் தெரியாத பல புதுமுகங்களும் நடித்துள்ளனர். அனைவருக்கும் இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். இந்த மேடை மிக அன்பாக ஆதரவாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் "பாட்டில் ராதா" பட மேடையில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதைப் பார்த்து மிக வருத்தமாக இருந்தது. தமிழ்த் திரைத்துறை உலகம் முழுக்க மதிக்கக் கூடியது.

அதை ஆபாசமாக்கக் கூடாது. அவரை பல மேடைகளில் பார்த்து வருகிறேன். தமிழ் ஆளுமைகள் நிறைந்த மேடையில், மிக அநாகரிகமாகப் பேசியது மிக வருத்தமாக இருந்தது. இயக்குநர் பாலாவை, ஐயா இளையராஜா அவர்களை வாடா போடா என்கிறார். யார் இவர் எல்லோரையும் வாடா, போடா எனப் பேச? மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும். இந்த மேடை போல் அன்பாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார் அருள் தாஸ். இந்தப் பேச்சு தற்போது மிஷ்கினுக்கு சிக்கலாக மாறியிருக்கிறது. தொடர்ந்து இணையவாசிகளும் பலரும் மிஷ்கின் பேசியது சரியல்ல, பெண் பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் நிறைந்த அரங்கில் இப்படியான தகாத வார்த்தைகள் பிரயோகம் கண்டிக்கத் தக்கது என விமர்சித்து வருகிறார்கள்.