திருவனந்தபுரம்: தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஊர்வசி, தற்போது குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அவரும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனும் கடந்த 2000ல் காதல் திருமணம் செய்தனர். அவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் இருக்கிறார். பிறகு ஊர்வசிக்கும், மனோஜ் கே.ஜெயனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2008ல் விவாகரத்து மூலம் அவர்கள் பிரிந்து விட்டனர். 2013ல் சிவபிரசாத் என்றதொழிலதிபரை ஊர்வசி காதல் திருமணம் செய்தார்.
அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். 2011ல் ஆஷா என்பவரை மனோஜ் கே.ஜெயன் காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி (23) ஹீரோயினாக அறிமுகமாகிறார். பினு பீட்டர் இயக்கும் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற மலையாள படத்தில் அவர் நடிக்கிறார். இதுகுறித்த சந்திப்பில் பங்கேற்ற மனோஜ் கே.ஜெயன், தேஜலட்சுமி பற்றி பேசும்போது கண்கலங்கினார். அவர் கூறுகையில், ‘சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை, முதலில் என் மனைவி ஆஷாவிடம் தேஜலட்சுமி சொன்னார்.
ஆனால், அவரது அம்மாவிடம் (ஊர்வசி) சொல்லி அனுமதியும், அவரது ஆசிர்வாதத்தையும் வாங்கி வரும்படி நான் சொன்னேன். உடனே சென்னைக்கு சென்ற தேஜலட்சுமி, அவரை சந்தித்துவிட்டு வந்தார். பிறகு அவருக்கான சிறந்த கதையை தேர்வு செய்ய எனது நெருங்கிய நண்பர்கள் சேது, அலெக்ஸ் ஆகியோரிடம் சொன்னேன். சேது, சரியான கதை என்று இப்படத்தின் கதையை தேர்வு செய்தார். ஊர்வசியும் கதை கேட்கட்டும் என்று சொன்னேன். தேஜலட்சுமியின் அறிமுகத்துக்கு சரியான கதை இது என்று அவர் நம்பினார். பிறகு நான் கதை கேட்டேன், மிகவும் பிடித்திருந்தது’ என்றார்.