சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள தான் முன்பு வசித்து வந்த வீட்டை கெஸ்ட் ஹவுஸ் ஆக மாற்றினார் மம்மூட்டி. அதை வாடகைக்கு விட்டு வருகிறார். மம்முட்டி வீட்டில் சென்று தங்குகிறோம் என்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் பலர் அங்கு சென்று தங்கிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மம்மூட்டி பாணியில் மோகன்லாலும் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை சுற்றுலா பயணிகளுக்காக தற்போது தினசரி வாடகைக்கு விட துவங்குகிறார். அதுவும் தமிழ்நாட்டில். ஊட்டியில் இருக்கும் அவரது கெஸ்ட் ஹவுஸை தினசரி 37 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடுகிறார். இங்கு மூன்று அறைகள் உள்பட நீச்சல் குளம், ஜிம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஒரு ஓவிய கேலரி விளையாட்டு அரங்கு உள்ளது.
இது பொழுதுபோக்கிற்காக உள்ளது. அது மட்டுமின்றி மரைக்கார் படத்தில் தான் டம்மி ஆயுதங்களை அங்கே பார்வைக்காக மோகன்லால் வைத்திருக்கிறார். இந்த கெஸ்ட் ஹவுசில் சமையல்காரரும் இருப்பார். இங்கு வந்து தங்குபவர்கள், தங்களுக்கு என்ன தேவையோ அதைச் சொல்லிவிட்டால், அந்த சமையல்காரர் சமைத்து தந்துவிடுவார். அவருக்கு தனியே கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால் உணவுக்கான காய்கறிகள், மீன், கறி வகைகளை வாங்க நாம் தனியே பணம் தர வேண்டும். இந்த கெஸ்ட் ஹவுசில் தங்குவதற்கு விரைவில் புக்கிங் தொடங்க உள்ளதாக மோகன்லால் தெரிவித்துள்ளார்.