ஸ்ரீகாகுளம் மீனவர் நாக சைதன்யாவை சாய் பல்லவி தீவிரமாக காதலிக்கிறார். இந்நிலையில், 22 பேர் கொண்ட குழுவுக்கு தண்டேல் (தலைவன்) ஆக ஆடுகளம் நரேனால் அறிவிக்கப்படும் நாக சைதன்யா, சாய் பல்லவியை விட்டுப் பிரிந்து, குஜராத்தில் மீன் பிடிக்க குழுவினருடன் ஒரு படகில் செல்கிறார். அப்போது கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவக்குழுவினர், கராச்சி சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
நாக சைதன்யா, சிறையில் இருந்து தப்பித்தாரா? மீனவக்குழுவினர் என்ன ஆனார்கள்? கருணாகரனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சாய் பல்லவியின் கதி என்ன என்பது மீதி கதை. ஸ்ரீகாகுளம் மீனவர்கள் சந்தித்த உண்மைச் சம்பவத்தை எளிமையான காதலுடன், வலிமையான தேசப்பற்றைக் கலந்து சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார். தண்டேல் ஆக நாக சைதன்யா சிறப்பாக நடித்துள்ளார். சண்டை மற்றும் கடல் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்துள்ளார்.
சாய் பல்லவியுடனான காதல், சிறையில் இந்திய தேசியக்கொடிக்காக போராடுவது என்று மாஸ் ஹீரோவாக ஜொலிக்கிறார். படத்தை தாங்கும் மிகப்பெரிய தூண், சாய் பல்லவி. தன் பேச்சை மீறிய காதலன் பாகிஸ்தான் சிறையில் வாடுவதை அறிந்து, அவரைக் காப்பாற்ற ஒன்றிய அமைச்சர் வரை சந்தித்துப் போராடுகிறார். வில்லனாக வந்து, கடைசியில் மனிதநேயம் கொண்ட மனிதராக கருணாகரன் மாறுகிறார்.
பப்லு பிருத்விராஜ், ‘ஆடுகளம்’ நரேன், பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை உள்பட பலர் வலுவான கேரக்டரில் நடித்துள்ளனர். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப கமர்ஷியல் மசாலாவை பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தேவிஸ்ரீ பிரசாத் வெளிப்படுத்தியுள்ளார். கடற்புரத்துக்கே சென்று வந்த உணர்வை ஷாம் தத் கேமரா ஏற்படுத்தியுள்ளது. காதல் காட்சிகள் கவனிக்க வைத்தாலும், பாகிஸ்தான் சிறையில் தேசப்பற்றை விட ஹீரோயிசத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது, படத்தின் முழுநோக்கத்தையும் சிதைத்துவிடுவது போலிருக்கிறது.