ஐதராபாத்: தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா, நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரது உடற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது இந்திப் படத்திலும், வெப்தொடரிலும் நடிக்கும் சமந்தா, தன் வாழ்க்கையில் ஆன்மீகம்தான் தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருவதாக சொல்லியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
அவ்வப்போது வாழ்க்கையில் சில விஷயங்களை அதிரடியாக மாற்றிக்கொள்ள விரும்புகிறோம். நம்பிக்கை மட்டுமே நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கவே கூடாது என்று நினைத்தேன். ஆனால், வாழ்க்கை நம்மீது வீசும் அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளேன். இப்போது நான் வலுவாக இருப்பதற்கு முக்கியமான காரணம் ஆன்மீக ஈடுபாடு. எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆன்மீகம்தான் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. என் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் அதுதான் தாக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய உலகில் முன்பைவிட ஆன்மீகம் அதிகமாக தேவைப்படுகிறது.
என் வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னை
களால் எனக்கு பல்வேறு நன்மைகள் நடந்துள்ளன. கஷ்டங்கள் வரும்போதுதான் நம்மையும் அறியாமல் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். தற்போது நான் புதிதாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். தற்காப்புக்கலைகள், அம்பு எய்தல், கத்திச்சண்டை, குதிரை ஏற்றம், பாலட் என்று பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எப்போதும் புதிதாக கற்றுக்கொள்வது என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இப்போது எனது வாழ்க்கை சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.