சென்னை: சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி நடித்துள்ள படம், ‘ரகு தாத்தா’. இதை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசியதாவது: இப்படத்தின் டீசரைப் பார்த்தவுடன், இது இந்தி திணிப்புக்கு எதிரான படம் என்று புரிந்திருக்கும். வரும் டிசம்பர் மாதம் நான் இந்தியில் அறிமுகமாகும் ‘பேபி ஜான்’ படம் ரிலீசாகிறது.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் தமிழில் நான் இந்தியை எதிர்க்கும் படத்தில் நடித்துள்ளேனே என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கும். அதற்கு விளக்கம் சொல்வது என் கடமை. இப்படத்தில் எந்த அரசியல் சர்ச்சைகளும் இருக்காது. இது முழுநீள காமெடி படம். இந்தி திணிப்பை பலமாக எதிர்க்கும் படம் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான திணிப்புகளுக்கும் எதிரான படம். இதில் நான் எப்படி நடிக்கப்போகிறேன் என்ற தயக்கம் இருந்தது. உடனே சுமன் குமார் என் தயக்கத்தைப் போக்கினார்.
‘சாணிக் காயிதம்’ என்ற படத்தை தொடர்ந்து பெண் ஒளிப்பதிவாளர் யாமினியுடன் மீண்டும் பணியாற்றியுள்ளேன். இப்படத்தில் பல பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது, படத்துக்கான உண்மையான பலம் என்று நம்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த இப்படத்தின் பாடல்களை மக்கள் கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஷான் ரோல்டனுக்கு நன்றி. இப்படம் இந்தி திணிப்புக்கு எதிரானது. ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாக இருந்தாலும்கூட, பிரசாரம் செய்யும் படமாக இருக்காது. அடுத்து ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’, தெலுங்கில் ஒரு படம், ‘அக்கா’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறேன்.