கொச்சி: மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், அமலா பால். திரைப்படம், வெப்தொடர், விளம்பரங்களில் தோன்றும் அவர், ‘தலைவா’ படத்தில் நடித்த போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்தார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து பஞ்சாப் பாடகருடன் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்த அமலா பால், கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்தார்.
அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்த அவர், கடந்த வாரம் வட இந்தியாவை சேர்ந்த தனது புதிய காதலன் ஜெகத் தேசாய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்த போட்டோக்களை வெளியிட்டார். அமலா பால் பிறந்தநாள் அன்று ஜெகத் தேசாய் அமலா பாலுக்கு புரபோஸ் செய்த நிலையில், நேற்று அவர்கள் இருவருக்கும் கொச்சியில் திடீரென்று திருமணம் நடந்தது. அந்த போட்டோக்களை அமலா பால், ஜெகத் தேசாய் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். மேலும், ‘இரண்டு ஆத்மாக்கள். ஒரு விதி. என் தெய்வீகமான பெண்ணுடன் கைகோர்த்து இந்த வாழ்நாள் முழுவதும் நடக்கப்போகிறேன்’ என்று ஜெகத் தேசாய் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.