சென்னை: விஜய் சேதுபதியின் மகனும், தமிழில் வெளியான ‘நானும் ரவுடிதான்’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களில் நடித்தவரும், வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் ‘விடுதலை 2’ படத்தில் நடித்து வருபவருமான சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ்: வீழான்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். முக்கிய வேடங்களில் வரலட்சுமி, சம்பத் நடிக்கின்றனர். படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பங்கேற்றார். முன்னதாக இப்படத்தின் தொடக்க விழாவில் பேசிய சூர்யா, ‘அப்பா வேறு, நான் வேறு. அதனால்தான் டைட்டிலில் ‘சூர்யா’ என்று வைத்திருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையாகி, பல்வேறு தரப்பு ரசிகர்கள் கமென்ட் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பங்கேற்றது குறித்து சூர்யாவிடம் கேட்டபோது, ‘தந்தையர் தினத்தில் அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அவரை அழைத்தேன். அம்மாவும், தங்கையும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். பூஜை அன்று அதிக பதற்றத்துடன் இருந்தேன். நான் செம ஜாலி டைப். அன்று பதற்றத்தில் அப்படி பேசிவிட்டேன். சமூக வலைத்தளங்களில் நிறைய ட்ரோல் செய்தனர். மிகப்பெரிய நடிகர்களே இதுபோன்ற பிரச்னையை சந்திக்கும்போது, நானெல்லாம் எம்மாத்திரம்?’ என்று ஜாலியாகப் பேசினார். தொடர்ந்து அவரிடம், ‘சூர்யா என்ற முன்னணி நடிகர் இருக்கும்போது, நீங்கள் ஏன் பெயரை மாற்றவில்லை?’ என்று கேட்டபோது, ‘என் பெயர் சூர்யா. அது அப்படியே இருக்கட்டும். எல்லோரும் என்னைப் பற்றி பேசும் போது, ‘விஜய் சேதுபதியின் மகன் சூர்யா’ என்றே சொல்கிறார்கள். ‘பீனிக்ஸ்’ ரிலீசுக்குப் பிறகு இதுபற்றி நாம் பேசலாம்’ என்றார், சூர்யா.