சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் பீட்சா. விஜய்சேதுபதி நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2013ம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதன் 3ம் பாகம் ‘பீட்சா: தி மம்மி’ என்ற பெயரில் வெளிவருகிறது. இதனை திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார். அவரின் உதவியாளர் மோகன் கோவிந்த் இயக்கி உள்ளார். அஷ்வின், பவித்ரா மாரிமுத்து, காளி வெங்கட், குரேஷி, அனுபமா, அபி, கவுரவ் நாராயணன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் ராஜ் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் மோகன் கோவிந்த் கூறியதாவது: படத்தின் நாயகன் அஸ்வின் ஒரு செஃப். அவர் ஒரு ரெஸ்ட்டாரெண்ட் நடத்துகிறார்.
அந்த ரெஸ்ட்டாரெண்டில் இரவு பிரிட்ஜில் ஒரு ஸ்வீட் இருக்கிறது. யாரோ அதை செய்து வைக்கிறார்கள். அந்த ஸ்வீட்டுக்கு ஏராளமான டிமாண்ட் ஏற்படுகிறது. ஆனால் அந்த ஸ்வீட்டை யாருக்கு டெலிவரி செய்கிறார்களோ அவர்கள் இறந்து விடுகிறார்கள். அந்த பழி அஸ்வின் மீது விழுதுகிறது. ஸ்வீட்டை செய்வது யார்? கொலை செய்யப்படுவது ஏன் என்பதுதான் படத்தின் கதை. பெரும்பகுதி கதை இரவில் நடக்கும். சென்னையில் உள்ள 5 நட்சத்திர மார்டன் ரெஸ்ட்டாரெண்டில் படமாக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேய் படங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றார்.