சென்னை: தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர், ஸ்ரீதிவ்யா. பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தொடர்ந்து ‘ஜீவா’, ‘வெள்ளக்கார துரை’, ‘காக்கி சட்டை’, ‘ஈட்டி’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘பென்சில்’, ‘மருது’, ‘ரெமோ’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்தார். பிறகு அவருக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்துள்ள அவர், ‘ரெய்டு’ என்ற படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்துள்ளார்.
இயக்குனர் முத்தையா தங்கை மகன் கார்த்தி இயக்க, கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க, இயக்குனர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதிவ்யா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழில் புதுப்பட வாய்ப்புகள் குறைந்ததற்காக காரணம் எனக்கு தெரியவில்லை. சில படங்களின் கதையும், கேரக்டரும் சரியில்லை என்று நான் நிராகரித்தேன். எனக்கேற்ற நல்ல படங்களும் அமையவில்லை. அதனால் இந்த இடைவெளி ஏற்பட்டிருக்கலாம். எனினும், மற்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
இதனால், தமிழில் எனக்கு ஏற்பட்ட இடைவெளியை நான் உணரவில்லை. ‘வெள்ளக்கார துரை’ படத்துக்குப் பிறகு மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ‘ரெய்டு’ படத்தில் நடித்துள்ளேன். சமீபகாலமாக எனது திருமணம் பற்றிய வதந்திகள் பரவி வருகிறது. நான் யாரையோ காதலிப்பதாகவும், அவரையே விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அதை நானே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சிறிதளவும் உண்மை இல்லை.