சென்னை: தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது. ‘மர்மர்’ படம் சமீபத்தில் வெளியானது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. ஒளிப்பதிவு, ஜேசன் வில்லியம்ஸ். ‘மர்மர்’ படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.கே. பிக்சர்ஸ் பிரபாகரன் பேசும் போது, ‘‘தமிழக மக்கள், பத்திரிகை, ஊடகத்துறையை சார்ந்த அனைவருக்கும் நன்றி. இன்று இந்தப் படம் தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 400 திரைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது’’ என்றார். வினியோகஸ்தர் குகன் பேசும்போது, ‘‘ஆண்டுக்கு 250 திரைப்படங்கள் வரும் பட்சத்தில் அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. இதில் மாதம் ஒரு படம் தான் வெற்றி பெறுகிறது.
ஓராண்டில் வெற்றி பெறுவது 4 முதல் 6 சதவீத படங்கள் தான். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி பேர் உள்ளனர். 80 லட்சம் பேர் படங்களை பார்க்க வேண்டும். இதை கணக்கிட்டால் 160 கோடி ரூபாயாக இருக்கும். அந்த வகையில், ஒரு திரைப்படம் ₹160 கோடி வசூல் செய்தால் அது வெற்றி பெற்ற திரைப்படமாக இருக்கும். இதில் ஒரு சதவீதம் கிடைத்தால் வெற்றியா என்று கேட்டால் அது அந்த தயாரிப்பாளருக்குத் தான் தெரியும். அவர் எவ்வளவு பட்ஜெட்டில் படத்தை எடுத்திருக்கிறார் என்பதை வைத்து தான் வெற்றியை தீர்மானிக்க முடியும்’’ என்றார்.