சென்னை: கடந்த 6 மாதங்களில் தமிழில் 115 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் 101 படங்களால் ரூ.600 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டுக்கு 100 படங்கள் வரை வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலை சிறிது சிறிதாக மாறி, படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. சாட்டிலைட், ஓடிடி, டிவிக்கு இந்தி டப்பிங் உரிமம் உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக ஒரு வருடத்துக்கு 200க்கு அதிகமான படங்கள் ரிலீசாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 115 படங்கள் திரைக்கு வந்துவிட்டன. இதில் 101 படங்கள் எதிர்பார்த்த லாபத்தை
தரவில்லை. இதனால் தமிழ் சினிமா மீண்டும் தள்ளாடும் நிலைக்கு சென்றிருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்புகள் நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் சினிமா அதாளபாதாளத்துக்கு சென்றது. கொரோனா தீவிரம் குறைந்த பிறகு மெல்ல மெல்ல சினிமாத்துறை தலைதூக்க ஆரம்பித்தது. அதில் முக்கியமாக மலையாள சினிமா நல்ல நல்ல படங்கள் மூலம் மீண்டு வந்துவிட்டது. ஆனால் தமிழ் சினிமாவிலோ நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வராததால் மீண்டும் கொரோனா காலகட்டத்துக்கு தமிழ் சினிமாத்துறை திரும்பி வருகிறது. இதைத்தான் கடந்த 6 மாதத்தில் படங்களின் தோல்வி எடுத்துக்காட்டுகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராசி கன்னா, யோகி பாபு நடிப்பில் வெளிவந்த ‘அரண்மனை 4’, விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, சசிக்குமார், சூரி நடித்த ‘கருடன்’, கவின் நடித்த ‘ஸ்டார்’ ஆகிய படங்கள் மட்டுமே வினியோகஸ்தர்களுக்கு லாபத்தை தரும் படங்களாக அமைந்திருக்கின்றன. ஆனால் அதிலும் ‘அரண்மனை 4’ மட்டும்தான் ரூ.100 கோடி வசூலை எட்டிய படமாகும். மற்ற 3 படங்களுமே சொற்ப லாபத்தை பார்த்த படங்களாகவே இருக்கின்றன.
இது குறித்து சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசுபோது, ‘தமிழ்நாட்டை பொருத்தவரை தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, இங்குதான் இப்படியொரு நிலை இருக்கிறது. பெரும் வசூல் செய்ய வேண்டிய, நல்ல விமர்சனங்களை பெற்ற படங்கள் கூட பெரும் லாபத்ைத தரவில்லை என்பதுதான் உண்மை. இத்துடன் டிஜிட்டல் உரிமத்தில் பெரும் அடி விழுந்துள்ளது. முன்பெல்லாம் ஒரு படம் ரூ.20 கோடியை தியேட்டரில் வசூலித்தால் அதே தொகைக்கு டிஜிட்டல் (ஓடிடி) உரிமை பெறுவார்கள். ஆனால் இப்போது ரூ.20 கோடி வசூலிக்கும் படத்துக்கு கூட வெறும் 3 கோடி 4 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமை போகிறது. இதை நிலை நீடித்தால் தமிழ் சினிமா பெரும் பாதிப்புக்குள்ளாகும்’ என்றார்.
இந்த 101 படங்களின் தோல்வியால் மட்டும் ரூ.600 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் சினிமா டிரேட் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. இந்நிலையில் அடுத்த 6 மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான பலப்பரீட்சையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த 6 மாதத்தில்தான் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, ரஜியின் ‘வேட்டையன்’, விஜய்யின் ‘கோட்’, விக்ரமின் ‘தங்கலான்’, சூர்யாவின் ‘கங்குவா’, தனுஷின் ‘ராயன்’, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ உள்ளிட்ட பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன. இப்படங்கள் சாதிக்கும் பட்சத்திலே தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் மாறும் என சினிமா வல்லுநர்கள் கூறுகின்றனர்.