சென்னை: திரைக்கு வந்த ‘மௌனகுரு’, ‘மகாமுனி’ ஆகிய படங்களை தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்திருக்கும் காதலுடன் கூடிய ஆக்ஷன் கிரைம் திரில்லர் படம், ‘ரசவாதி-தி அல்கெமிஸ்ட்’. இது வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அர்ஜூன் தாஸ் ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மற்றும் ரம்யா சுப்பிரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் நடித்துள்ளனர். சரவணன் இளவரசு, சிவகுமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையில் யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.
படம் குறித்து சாந்தகுமார் கூறியதாவது: கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக மலைப்பகுதியில் வந்திறங்கும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் அவருக்கு தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் சில பிரச்னைகளை சந்திக்கிறார். ரசவாதி என்பது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் கண் முன்னால் கொண்டு வரக்கூடிய ஒரு விஷயம். கொடைக்கானலில் நிகழ்கால கதை நடக்கிறது.