மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் ஜோடி காதலிப்பதை அறிந்த அவர்களது பெற்றோர், இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்கின்றனர். சில நாட்களில் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், ஸ்ம்ருதி வெங்கட்டின் வீட்டுக்குள் நுழையும் நண்பர் ராஜ் ஐயப்பா, திடீரென்று மரணம் அடைகிறார். இப்பிரச்னையில் இருந்து வருங்கால மனைவியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் கிஷன் தாஸ். அதன் பிறகு நடப்பதே மீதி கதை. எதிர்பாராத தருணத்தில் நடந்த கொலை, அதை மறைக்க முயற்சிக்கும் ஹீரோ, ஹீரோயினின் நடவடிக்கைகளை மையப்படுத்திய கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரை, ‘தேஜாவு’ அரவிந்த் னிவாசன் விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்.
முற்பகுதியை ஜாலியாகக் கொண்டு சென்ற அவர், பிற்பகுதி காட்சிகளில் பதற வைத்திருக்கிறார். காதலியாக வரும் ஸ்ம்ருதி வெங்கட், இயல்பான நடவடிக்கைகளின் மூலம் மனதைக் கவர்கிறார். அவரைக் காப்பாற்றத் துடிக்கும் காதலனாகவும், கொலையை தற்கொலையாக மாற்ற முயற்சிக்கும் ஒரு புத்திசாலி போலீஸ் அதிகாரியாகவும் கிஷன் தாஸ் சிறப்பாக நடித்துள்ளார். கதையின் திருப்பத்துக்கு ராஜ் ஐயப்பா உதவியிருக்கிறார். அவரது தாயாக கீதா கைலாசம், ஹீரோவின் நண்பராக பாலசரவணன் ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை அஸ்வின் ஹேமந்த் வழங்கி மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, காட்சிகளை இயல்பாகப் பதிவு செய்து அசத்தியுள்ளார். ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் தென்பட்டாலும், எளிய பட்ஜெட்டில் படம் கவனத்தை ஈர்த்துள்ளது.