ஐதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசா மாநிலத்தில் உள்ள கோராபுட் என்ற இடத்தில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு முன்பாக அமெரிக்கா செல்வதற்காக விசாகப்பட்டினம் விமானநிலையத்திற்கு கார் ஓட்டிச் சென்றுள்ளார் பிரியங்கா. அப்போது ‘கொய்யா விற்ற பெண் ஒருவர் தன்னை ஊக்கப்படுத்தியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. அதில், “இன்று நான் மிகவும் ஊக்கப்படுத்தப்பட்டேன். மும்பை வழியாக அமெரிக்கா செல்ல விசாகப்பட்டினம் விமான நிலையம் வரை கார் ஓட்டிக் கொண்டு சென்றேன். வழியில் ஒரு பெண் கொய்யா விற்றதைப் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும். அந்தப் பெண்ணிடம் என்ன விலை என்று கேட்டேன்.
கிலோ 150 ரூபாய் என்றார். நான் அவரிடம் 200 ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவருடைய வாழ்க்கையை நடத்துவதற்கு அவர் கொய்யா விற்கிறார். நான் பணம் கொடுத்ததும் அவர் போய்விட்டார். இருந்தாலும் சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறுவதற்குள் அவர் என்னிடம் திரும்பவும் வந்து மேலும் சில கொய்யாக்களைக் கொடுத்தார். இப்போது நீங்க கொடுத்த காசு சரியாகிவிட்டது என்றார். உழைக்கும் பெண், தனது வேலையில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறார் என்பதை பார்த்து வியந்து போனேன்” என்று பேசியுள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.