சோனி பிக்சர்ஸ் வெளியீட்டில் ஜூலியஸ் அவெரி இயக்கத்தில் ரூஸ்ஸோ குரோவ், டேனியல் ஸோவாட்டோ , அலெக்ஸ் எஸ்ஸோ, ஃபிரான்கோ நிரோ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹாரர் திரைப்படம் ‘தி போப்’ஸ் எக்ஸார்சிஸ்ட்’ படம்.
புகழ் பெற்ற ரோம் டயாசிஸ் தேவாலயத்தைச் சேர்ந்த கேப்ரியல் அமோர்த் பாதிரியார் பேய் ஓட்டுவதில் கைதேர்ந்தவர். அவரின் குறிப்புகள் மற்றும் சம்பவங்களின் தொகுப்பாக வெளியான 2 புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி இருக்கும் திரைப்படம்.
கேப்ரியல் அமோர்த் ( ரூசோ குரோவ்) புகழ்பெற்ற பேய் ஓட்டும் நிபுணராக தேவாலயத்திற்கு வரும் வழக்குகளை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி வருகிறார். ஒரு சில வழக்குகள் தனக்கு பேய் பிடித்து விட்டதாக நினைத்துக் கொண்டு மனதளவில் பிரச்சனைக்குள்ளாகி குழப்பம் செய்பவர்களையும் தனது தந்திரமான யுக்தியால் குணப்படுத்துகிறார். அவருக்கு ஸ்பெயினில் ஒரு சிறுவன் கெட்ட ஆத்மாவிடம் மாட்டிக் கொண்டிருப்பதாக அவரை காப்பாற்றும்படி டயாசிஸ் அவரை ஸ்பெய்னுக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் தேவாலயமும், கேப்ரியலும் நினைத்ததை விட சாத்தானின் ஆதிக்கமும் ஆட்டமும் பயங்கரமாக இருக்கிறது. ஏதும் அறியாத சின்னஞ்சிறு சிறுவனையும் அவனது சகோதரி மற்றும் தாயை காப்பாற்றும் பொறுப்பும் கேப்ரியலுக்கு வருகிறது. மேலும் இந்த பேய் ஓட்டும் வேலையில் இன்னும் நிறைய மறைக்கப்பட்ட விஷயங்களும் வெளியே வருகின்றன. முடிவு என்ன என்பது மீதிக்கதை.
புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வென்ற ‘கிளாடியேட்டர்’ திரைப்பட நாயகன் ரூஸ்ஸொ இந்த படத்தின் மூலம் முதல்முறையாக ஹாரர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தனது கைதேர்ந்த நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுக்க ரசிகர்களை வைத்திருப்பவர் ரூசோ. இந்தப் படத்தில் பாதிரியாராக காமெடி, நையாண்டி, உடன் பேய் ஓட்டும் வேலை என சிங்கிள் மேன் ஆர்மியாக மாஸ் காட்டுகிறார்.
சிறுவன் பீட்டர் டிசௌஸா படம் முழுக்க ஆதிக்கம் செலுத்திய நடிப்பில் மிளிர்கிறார். அவருடைய முக பாவங்களும், பேச்சும் , படத்துக்கு பக்க பலமாக நம்மை அரட்டி உருட்டுகிறது.
ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் காட்சிகள் . இருட்டிலேயே சுற்றும் சிறுவன், மைதானம் போன்ற பெட்ரூமில் தனியாக உறங்க வைப்பது என இதனை எப்போது தான் மாற்றுவார்களோ. நிச்சயம் பேய் படங்கள் என்றால் பயப்படும் நபர்களுக்கு ஒரு சில காட்சிகள் ஹைலைட்டாக ட்ரீட் கொடுக்கும். குறிப்பாக கெட்ட ஆத்மா சிறுவனின் உடலில் இருந்து சகோதரியின் உடலுக்கு மாறிய பின் நடக்கும் சம்பவங்கள் அருமை.
ஹாரர் படங்கள் என்றாலே அடுத்தடுத்த பாகங்களாக மாற்றினால் தான் சிறப்பு என புரிந்து கொண்ட இயக்குனர் ஜூலியஸ் அதற்கேற்ப ஆயிரம் கதைகளைக் கொண்ட கேப்ரியல் அமோர்த் பாதிரியாரின் கதைகளையே கையில் எடுத்தது புத்திசாலித்தனம் என்றே தோன்றுகிறது. தோண்ட தோண்ட விதவிதமான எக்ஸார்சிஸ்ட் கதைகள் இவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கலித் மோஹ்தாசெப் ஒளிப்பதிவும், ஜெட் குர்ஸெல் இசையும் ஹாரர் மோடுக்கு அதிரடியான கெமிஸ்ட்ரியாக மிரட்டுகிறது.
மொத்தத்தில் பேயை காமெடியாக்கி பார்க்கும் காலகட்டத்திலும் இன்னமும் கண்துடைப்பாக வரும் இப்படியான ஹாரர் படங்கள் நிச்சயம் தேவை என்பதால் ‘தி போப்’ஸ் எக்ஸார்சிஸ்ட்’ திரைப்படம் ஆஸ்கர் நாயகன் ரூஸ்ஸோவுடன் இணைய டபுள் ட்ரீட்டாக விருந்து கொடுக்கிறது.