அமெரிக்காவில் எலிசா என்ற கோடீஸ்வர இந்திய பெண்மணி சுஹாசினி, மூச்சுத்திணறலுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாய் துண்டிக்கப்பட்டதால் இறந்துவிடுகிறார். அது ஒரு திட்டமிட்ட படுகொலை என்று போலீஸ் சந்தேகிக்கிறது. அங்கிருந்த ஸ்ருதி ஹரிஹரனின் கைரேகை பதிவுகளை வைத்து அவரை கைது செய்கின்றனர். வழக்கறிஞர் வரலட்சுமி வாதாடிய பின்பு, ஸ்ருதி ஹரிஹரன் நிரபராதி என்று விடுதலை செய்யப்படுகிறார். ஆனால், நிஜ குற்றவாளி யார் என்று அறியும்போது அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. அமெரிக்காவின் நீதிமன்ற காட்சிகள் இயல்பாக இருக்கின்றன. தன்மீது சுமத்தப்பட்ட கொலைப்பழியில் இருந்து தப்பிக்க போராடும் ஸ்ருதி ஹரிஹரனின் நடிப்பு தரம் வாய்ந்தது. வரலட்சுமி நேர்த்தியாக வாதாடியிருக்கிறார். சுஹாசினி அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்.
பிரகாஷ் மோகன்தாஸ், வித்யுலேகா ராமன், ஆனா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். பணம், காதல், காமம் போன்ற விஷயங்களில் மனிதர்களின் மனம் எப்படி மாறுகிறது என்பதை இயக்குனர் கிருஷ்ணா சங்கர் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, ஆதித்யா ராவின் பின்னணி இசை, சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. தீர்ப்பு என்பது பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடாது. நியாயம் கிடைக்கச் செய்வதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்லும் இப்படம், நாடகத்தனமாக படமாக்கப்பட்டுள்ளது மைனஸ்.