ஏற்காடு மலையில் கும்மிருட்டில் வேகமாக காரோட்டி வரும் சதீஷ், திடீரென்று ஒரு பைக் மீது மோதுகிறார். இதில் படுகாயமடைந்த ஹெல்மெட் அணிந்த ஆசாமி பேச்சுமூச்சின்றி கிடக்க, அவரை ரத்தம் சொட்டச்சொட்ட இழுத்துச்சென்று, கார் டிக்கியில் மறைத்து வைக்கிறார். நடுவழியில் போலீசாரின் சோதனையில் சிக்கிய சதீஷ், டிரங்க் அன்ட் டிரைவ் கேஸில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில், போலீஸ் பாவெல் நவகீதனின் கன்னத்தில் அறைந்த சதீஷ், போலீஸ் லாக்கப்பில் வைத்து லத்தியால் செமத்தியாக கவனிக்கப்படுகிறார்.
அப்போது இன்னொரு போலீஸ் அஜய் ராஜூக்கும், பாவெல் நவகீதனுக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதலால் கடுமையாக பாதிக்கப்படும் சதீஷ், கொலையாளி என்று குற்றம் சாட்டப்படுகிறார். பைக்கில் வந்த ஆசாமியை சதீஷ் கொன்றாரா? அஜய் ராஜூக்கும், சதீஷ் தங்கை ரித்திகாவுக்கும் என்ன பகை என்பது மீதி கதை. கொடூர கொலைதான் கதைக்களம். முழுநீள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் என்பதால், ஏற்காடு மலையிலேயே முழு படத்தையும் இரவு நேரங்களில் படமாக்கி, நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளார் இயக்குனர் ‘சிக்சர்’ சாச்சி. ‘நாய்சேகர்’, ‘வித்தைக்காரன்’, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ போன்ற படங்களை தொடர்ந்து கதையின் நாயகனாக பொறுப்புணர்ந்து நடித்துள்ள சதீஷ், தான் ஏற்ற கேரக்டரின் மூலம் பரிதாபத்தை வரவழைக்கிறார். ரித்திகா கேரக்டர் மனதை உலுக்குகிறது.
வித்யா பிரதீப், வெண்பாவுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. அஜய் ராஜ், பாவெல் நவகீதன், மைம் கோபி ஆகியோரின் போலீஸ் ஸ்டேஷன் கெடுபிடி மற்றும் அலப்பறைகள், நிஜத்தில் நடப்பதைச் சொல்கின்றன. பவா செல்லதுரை, மறைந்த ஈ.ராமதாஸ் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். காட்சிகளை சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளது, பி.ஜி.முத்தையாவின் கேமரா. எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் பின்னணி இசை, காட்சிகளை அழுத்தமான சஸ்பென்சுடன் நகர்த்த உதவியிருக்கிறது. இரண்டாம் பாதியைப் போல் முதல் பாதியிலும் விறுவிறுப்பான காட்சிகளை அமைத்திருக்கலாம்.