டெல்லியையே ஆட்டிப்படைக்கும் தாதாக்கள் நாசர், அவரது தம்பி கமல்ஹாசன். அவர்களுக்கும், மற்றொரு தாதா மகேஷ் மஞ்ச்ரேக்கருக்கும் மோதல் ஏற்படும் நிலையில், சமாதான பேச்சுவார்த்தையின் போது கமல்ஹாசனை கொல்ல சதி நடக்கிறது. அப்போது சிறுவன் சிம்புவை கேடயமாக பயன்படுத்தி கமல்ஹாசன் தப்பிக்கிறார். பிறகு கமல்ஹாசன் சிம்புவை தத்தெடுத்து தன் மகன் போல் வளர்கிறார். தனக்கு பிறகு சிம்புவை தொழிலில் களமிறக்க கமல்ஹாசன் உத்தரவிடுகிறார். ஒருகட்டத்தில், சிம்பு தனக்கு எதிராக செயல்படுவதாக கமல்ஹாசன் சந்தேகப்படுகிறார். இதையறிந்து வருத்தப்படும் சிம்புவை வசமாக மடக்கிய நாசர், ஜோஜு ஜார்ஜ், பக்ஸ் ஆகியோர், திடீரென்று கமல்ஹாசனுக்கு எதிராக போர் தொடுக்கின்றனர். காத்மாண்டு பனி மலையில் கமலுடன் சிம்பு மோதுகிறார். அப்போது நாசர், ஜோஜு ஜார்ஜ், பக்ஸ் ஆகியோரும் கமலை தாக்குகிறார்கள்.
பிறகு கமல்ஹாசன் உயிர் பிழைத்தாரா? சிம்புவின் எண்ணம் நிறைவேறியதா? எதிரிகள் என்ன ஆனார்கள் என்பது மீதி கதை. 37 வருடங்களுக்கு பிறகு ‘நாயகன்’ கூட்டணியான கமல்ஹாசன், மணிரத்னம் மீண்டும் இணைந்து, சிறப்பான திரை அனுபவத்தை வழங்கியுள்ளனர். தாதா ரங்கராய சக்திவேல் நாயக்கர் கேரக்டரில் 100 சதவீத கடுமையான உழைப்பை வழங்கியுள்ள கமல்ஹாசன், பாடிலாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரியில் மிரட்டியுள்ளார். சண்டைக் காட்சிகளில் அவரது அபார துணிச்சலும், உழைப்பும் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு சவால் விடுகிறது. அபிராமி மற்றும் திரிஷாவுடன் நெருக்கமான காட்சிகளில் இளமை துள்ளலுடன் புகுந்து விளையாடி இருக்கிறார். கமல்ஹாசனின் மனைவியாக அபிராமி, மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அண்ணனாக நாசர், அடியாட்களாக ஜோஜு ஜார்ஜ், பக்ஸ், காதலியாக திரிஷா,
அவரது கார்டியனாக வடிவுக்கரசி, விசுவாசியாக வையாபுரி, போலீஸ் உயரதிகாரிகளாக சேத்தன், அசோக் செல்வன், அவரது முன்னாள் மனைவியாக ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர், கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். ‘ஜிங்குச்சா’ என்ற பாடல் காட்சியில் சானியா மல்ஹோத்ராவின் நடனம் கவர்ந்திழுக்கிறது. கமல்ஹாசனுக்கு இணையாக வந்து, பிறகு வில்லனாக மாறும் சிம்புவின் நடிப்பு அசத்தல். கமல்ஹாசனிடம் இருந்து பிரித்து, திரிஷாவை அடைய நினைக்கும் அவரது துடிப்பு இளசுகளுக்கு சுவாரஸ்யமானது. கமல்ஹாசனும், அவரும் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, இருதரப்பு ரசிகர்களுக்கும் செம தீனி. புதுடெல்லி, திருச்செந்தூர், கோவா, காத்மாண்டு ஆகிய பகுதிகளில், காட்சிகள் விறுவிறுப்பாக நகர ரவி கே.சந்திரனின் கேமரா கடுமையாக உழைத்திருக்கிறது.
மேன்ஷனில் நடக்கும் துப்பாக்கிச்சூடு, கார் சேசிங் மற்றும் கேங்ஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் பிரமிப்பு ஏற்படுத்துகின்றன. பின்னணி இசையில் அழுத்தம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்களிலும் மெய் மறக்க வைக்கிறார். ‘ஜிங்குச்சா’ பாடல் ஆட வைக்கிறது. தீ, சின்மயி ஆகியோர் தனித்தனியாக பாடி ஹிட்டான ‘முத்த மழை’ பாடல் படத்தில் இல்லாதது ஏமாற்றம். எமோஷன் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இயக்குனர் மணிரத்னம் படைத்துள்ள கேங்ஸ்டர் கதை, நம்பிக்கை துரோகத்தின் வலியை உணர்த்துகிறது. மொத்தத்தில் கமல்ஹாசன், சிம்பு, மணிரத்னம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் விருந்து இது.