மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , ஜாக் ஷ்ரெயர் இயக்கத்தில் MCU உலகில் வித்யாசமான ஒரு சூப்பர் ஹீரோ குழு. ஃப்ளோரன்ஸ் பியூ, செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், வயட் ரஸ்ஸல், ஓல்கா குரிலென்கோ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது ‘தண்டர்போல்ட்ஸ்’ .
அமெரிக்க CIA இயக்குனர் வலெண்டினாவிடம் (ஜூலியா லூயிஸ்-டிரெஃபஸ்) வேலை செய்கிறார் எலெனா பெலோவா (ஃப்ளோரன்ஸ் பியூ) . ரெட் ரூமில் பயிற்சி எடுத்துக்கொண்ட ஒயிட் விடோவின் சகோதரி எலனா. உலகமே அதிசயிக்கும் சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் எலெனாவுக்கு முக்கிய மிஷன் ஒன்று கொடுத்து வால்ட்க்கு அனுப்பி வைக்கிறார் வலென்டினா. ஆனால் அங்கே மேலும் 3 சூப்பர் ஹீரோக்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்காக அனுப்பப் பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் வால்ட்டின் ஒரு பெட்டியிலிருந்து வெளி வருகிறார் பாப் (லூயிஸ் புல்மன்).
தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொலை செய்து கொள்ளத்தான் வாலென் டினா தங்களை இங்கே அனுப்பியிருக்கிறார் எனத் தெரிந்து பாப் சகிதமாக தப்பிக்கிறார்கள் நால்வர் குழு. ஆனால் இவர்கள் சூப்பர் ஹீரோக்கள் போல் சக்திவாய்ந்தவர்களாக இல்லாமல் மனக்குழப்பம், தனிமை, வெறுப்பு உள்ளிட்டப் பிரச்னைகளில் உளவியல் ரீதியாக சிக்கியிருக்கிறார்கள். இதனால் சேர்ந்து பணியாற்றுவதில் சிக்கல் உண்டாகிறது. இவர்கள் ஒன்றிணைந்து எப்படி ‘ தண்டர்போல்ட்ஸ்‘ உருவானது? பாப் ஏன் உருவாக்கப்பட்டான், அவன் சக்தி என்ன என்பது மீதிக்கதை.
இது ஒரு வித்யாசமான மார்வெல் படம். அத்தனை பேரும் ஆக்ஷனைக் காட்டிலும் எமோஷனில் அதிகம் ஸ்கோர் செய்கிறார்கள். ஃப்ளோரன்ஸ் பியூ, எலேனா கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர் எல்லோரின் பங்கும் அருமை. படத்தின் மையக்கரு லூயிஸ் புல்மன் தான். இவரின் கதாபாத்திரம் வரவிருக்கும் ‘அவஞ்சர்ஸ்: டூம்ஸ் டே’ படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் எனத் தெரிகிறது. மனிதர் அழுகை, சோகம், வெறுப்பு, இயலாமை, என அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து அனைவரையும் ஒன்று சேர்க்கும் இடம் அப்ளாஷ் வகை.
இயக்குனர் ஜேக் ஷ்ரெயர், சூப்பர் ஹீரோக்கள் முதலில் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளையும், மனக்குழப்பங்களையும் ஒழித்தால்தான் மற்றவர்களைக் காப்பாற்ற முடியும் என புதுமையாக வகுப்பெடுக்கிறார். எதிலும் ஒற்றுமை அவசியம் என்கிற கருத்தையும் வைத்திருக்கிறார். ஆண்ட்ரூஸ் ட்ரோஸ் பாலெர்மோ ஒளிப்பதிவில் இருள் சூழும் காட்சி அருமை. சண்டை காட்சிகள் அளவாக மிகக் குறைவு, ஆனால் உணர்வுகளில் கெட்டி. சன் லக்ஸ் பின்னணி இசையும் அதிரடி சேர்த்திருக்கிறது. எப்போதுமான மார்வெல் ஸ்டைல் படம் இல்லை என்பதாலேயே நிச்சயம் சின்ன ஏமாற்றம் உண்டாகும்.
குறிப்பாக ‘கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வோர்ல்ட்‘ திரைப்படமும் மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. என்பதால் இந்தப் படம் நீளமாகவும் தோன்றலாம். மொத்தத்தில் சூப்பர் ஹீரோவாக உலகைக் காக்க முதலில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்க வேண்டும் என வகுப்பெடுத்து மார்வெல் உலகில் புதிய பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறது ‘தண்டர்போல்ட்ஸ்‘.