திருப்பூர்: திருப்பூர் யூனியன் மெயின் ரோட்டில் ஸ்ரீசக்தி தியேட்டர் உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் திரையிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 4 காட்சிகள் படம் திரையிடப்பட்டதும், அது சல்மான்கான் நடித்த ‘டைகர் 3’ என்ற இந்தி திரைப்படம் என்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக காட்சிகள் திரையிடப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டரின் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.