நாகமலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பெரிய பொக்கிஷம் இருப்பதாகவும், அதை டைனோசர் காலத்தில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதை அடைய பணத்தாசை பிடித்த இனிகோ பிரபாகர், அகழ்வாராய்ச்சியாளர் வேதிகா, யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கருட இனத்தின் தலைவி சாந்தினி தமிழரசன் என பலரும் முயல்கிறார்கள். இந்த மாய உலகத்தின் பின்னணி என்ன என்பது மீதி கதை. அட்வெஞ்சர், ஃபேண்டஸி, பிரமாண்டமான விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் மிரட்டலாக இருக்கும் இந்த படம், சிறுவர்களுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கிறது. யாளி விலங்கு மற்றும் யானை, புலி, குரங்கு, பாம்பு ஆகியவற்றின் சாகசங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. இனிகோ பிரபாகர், யோகி பாபு, வேதிகா, சாந்தினி தமிழரசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், சென்ராயன் ஆகியோர், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
அடர்ந்த வனப்பகுதியின் அபாயத்தை பார்வையாளர்களுக்கு கடத்தி, கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ள கோபி துரைசாமி, வினோத் ஜே.பிக்கு பாராட்டுகள். அச்சு ராஜாமணியின் இசையில் சிவன் பாடல் கதைக்களத்தை விவரிக்கிறது. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. கே.எம்.ரியாஷின் எடிட்டிங் ‘நறுக்’. ஃபேண்டஸி உலகை விஎஃப்எக்ஸ் உதவியுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார், படத்தை எழுதி இயக்கியுள்ள பிரபதீஸ் சாம்ஸ். படத்தில் காமெடி பஞ்சத்தை களைய முயற்சித்து இருக்கலாம்.